திருத்தந்தை பிரான்சிஸ் : துறவற சபைகளின் சொத்துக்கள் பராமரிக்கப்படுவதில் ஒளிவுமறைவின்மை வெளிப்பட வேண்டும்
மார்ச்,08,2014. துறவற சபைகளின் சொத்துக்கள் பராமரிக்கப்படுவதில் ஒளிவுமறைவின்மை வெளிப்பட வேண்டும் மற்றும் ஏழைகள், துன்புறுவோர் போன்றோரின் பொருளாதார, நன்னெறி மற்றும் ஆன்மீகத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துறவற சபைகள் திருஅவையின் சொத்துக்களைப் பராமரிப்பது குறித்து உரோமையில் இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ள இரண்டு நாள்கள் அனைத்துலக கருத்தரங்குக்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கேட்டுள்ளார்.
துறவற சபைகள் தங்களின் சொத்துக்களைப் பராமரிப்பது, நிர்வகிப்பது, அவற்றைப் பயன்படுத்துவது குறித்து மதிப்பீடு செய்யும்போது, ஒவ்வொரு துறவு சபையும் தனது தனிவரத்துக்கும், ஆன்மீகப் பாரம்பரிய வளங்களுக்கும் பிரமாணிக்கமாய் இருக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார் திருத்தந்தை.
இக்காலத்தில் எண்ணற்ற துறைகளில் ஏற்படும் மாற்றங்களும், முன்னேற்றங்களும் இன்றைய மனிதரின் வாழ்விலும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன எனக் கூறியுள்ள திருத்தந்தை, உலகில் ஏழ்மைநிலை குறைக்கப்பட்டிருந்தாலும், மனிதரின் செயல்பாடுகள் ஒரு சமத்துவமற்ற பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு உதவி வருகின்றன எனவும் அச்செய்தியில் கூறியுள்ளார்.
சொத்துக்களை நிர்வகிப்பதில் விவேகத்தோடும், ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவும் செயல்படுவதில் துறவற சபைகள் விழிப்புடன் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏழைகள், நோயாளிகள், சிறார், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரில் ஏழைக் கிறிஸ்துவின் சதையைத் தொட்டு வறுமையைக் கண்டுணருமாறுக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இறைபராமரிப்பில் நம்பிக்கை வைக்கத் தூண்டும் நற்செய்தி அறிவுரையின்படி, தன்னலத்தைத் துறந்து ஏழைகள், துன்புறுவோர் போன்றோரின் பொருளாதார, நன்னெறி மற்றும் ஆன்மீகத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment